மோடியும், பழனிசாமியும் இருக்கும்வரை வேறு இடைத்தரகர் உருவாக முடியாது : சு.வெங்கடேசன் எம்.பி

மோடியும், பழனிசாமியும் இருக்கும்வரை வேறு இடைத்தரகர் உருவாக முடியாது : சு.வெங்கடேசன் எம்.பி
மோடியும், பழனிசாமியும் இருக்கும்வரை வேறு இடைத்தரகர் உருவாக முடியாது : சு.வெங்கடேசன் எம்.பி
Published on

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கும் வரை வேறு இடைத்தரகர் உருவாக முடியாது என மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், “இந்த சட்டம் உழவர்களுக்கு எதிரான சட்டம்; மாநில சுயாட்சிக்கு எதிரான சட்டம் ; 130 கோடி இந்திய மக்களின் உணவு உரிமைக்கு எதிரான சட்டம். அதனால்தான் இந்த சட்டத்தின் மீது விவாதம் நடந்த பொழுது பதில் வழங்கவேண்டிய மத்திய வேளாண்துறை அமைச்சர் , மானமுள்ள ஒரு அமைச்சர் மறுநிமிடமே ராஜினாமா செய்து வெளியேறினார் ; மானங்கெட்ட மங்குனிகள் இந்த நிமிடம் வரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

மூன்று மணி நேரம் இந்த சட்டத்திற்கு நாடாளுமன்ற மக்களவையில் வாதத்திற்கு ஒதுக்கினார்கள். அதில் இரண்டு மணிநேரம் ஆளும் கட்சியும், ஆளுங்கட்சியின் ஆதரவு கட்சிகளும் சட்டத்தை ஆதரித்து பேசினார்கள். எதிர்க்கட்சிகள் ஆகிய எங்களுக்கு ஒரு மணி நேரம் கூட கொடுக்கவில்லை. இந்த சட்டம் எப்படி 130 கோடி மக்களுக்கு எதிரானது என்பதை பேசுவதற்கு ஒரு மணி நேரம் கூட மோடி, அமித்ஷா அரசு எங்களுக்கு வழங்கவில்லை.

அது மட்டுமல்ல இங்கே தலைவர்களெல்லாம் குறிப்பிட்டார்கள் திமுகவின் தலைவரை பார்த்து தமிழகத்தின் முதலமைச்சர் இடைத்தரகர் என்று குறிப்பிடுகிறார். யார் இடைத்தரகர்கள் ? கொரோனாவால் இந்த நாடே திணறிக் கொண்டிருந்த பொழுது இந்த சட்டத்தை நிறைவேற்றினார்கள். மக்களவையில் இந்த சட்டம் நிறைவேறிய பொழுது நள்ளிரவு 12 மணி ; மாநிலங்களவையில் இந்த சட்டத்தை ஓட்டெடுப்பை நடத்தாமல் ஓட்டெடுப்பு நடத்தியதாக அறிவித்தீர்கள். ஜனாதிபதி கையெழுத்திட்டது ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி.‌ பெருந்தொற்றுகாலத்தில் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை கையெழுத்துப் போட்டு சட்டத்தை நிறைவேற்றிய நீங்கள் இடைத்தரகர்களா? நாங்கள் இடைத்தரகர்களா?

இந்தியாவில் பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கும் வரை இன்னொரு இடைத்தரகர் உருவாகவே முடியாது என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். போராடுபவர்களை பார்த்து அவர்கள் சொல்லுகிறார்கள்‌ போராடுபவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் , சீனா ஏஜென்ட்கள்; நக்சலைட்டுகள் எனச் சொல்கிறார்கள். இந்த நாட்டை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட பொழுது போராடிய அவர்களை தீவிரவாதிகள் என்றான், அதே போன்ற கொள்ளைக்காரர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்துகொண்டு போராடுகிற நம்மைப் பார்த்து தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என்கிறார்கள். நாங்கள் தேசபக்தர்கள்; இந்த தேசத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com