நீலகிரி மாவட்டத்தில் விளையும் முட்டைகோஸ், அறுவடைகாலம் முடிந்தும் கொரோனா காரணமாக சந்தைபடுத்த முடியாதால் தோட்டத்திலேயே அழுகத் துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு ரூ. 2 கோடிவரை இழப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி அருகே பட்டகொரை, ஈளடா, கதகட்டி பகுதிகளில் 60 ஏக்கரில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ளது. பொதுவாக முட்டைகோஸ் மூன்று மாதத்தில் வெட்டி விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கால் 4 மாதங்கள் கடந்த நிலையில், முட்டைகோஸ் வெட்டி விற்பனைக்கு எடுத்து செல்ல போதுமான வரவேற்பு இல்லாதால் முட்டைகோஸ் அழுகத் துவங்கியுள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் முட்டைக்கோஸை வெட்டி அதே பகுதியில் வீசி வருகின்றனர். இதனால் இரண்டு கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.