புதுச்சேரியில் விவசாயத்தை பாதுக்காக வலியுறுத்தி ஒரே இடத்தில் பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
புதுச்சேரி நாட்டியாஞ்சலி மையம், தாகூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அசிஸ்ட் உலக சாதனை நிறுவனம் சார்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. 5 வயது முதல் 83 வரையிலான சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என 5,625 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 26 நிமிடம் 2 வினாடிகள் தொடர்ந்து நடனம் ஆடினார்கள். வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜஹான் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அனைவரும் ஒரே நேரத்தில் நடனம் ஆடியது கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் 4365 பேர் பங்கேற்று 21 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடியது கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது புதுச்சேரியில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.