நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் பேச அதிகாரிகள் குழு விரைவில் செல்ல உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “திருவாரூரில் 305 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. 19 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி கொள்முதல் நிலையம் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்படும் எனவும், நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
அக்டோபர் 5ஆம் தேதி வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்தவர்களுக்கு பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்து தரமான அரிசி செய்ய முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அதன்படி அரசு செயல்படுகிறது" என்று தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 21 நவீன அரிசி ஆலைகளில் தரமான அரிசி உற்பத்தி செய்து வருகிறது. 900 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்புக் கழகம் 1000 மூட்டை மட்டுமே ஒருநாள் ஒரு கொள்முதல் நிலையத்தில் எடுப்பதற்கு அனுமதித்துள்ளது. கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படும் இடங்களில் திறக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “நெல் ஈரப்பதம் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து 21 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இதுகுறித்து அதிகாரிகள் டெல்லிக்கு கடிதம் எழுதி உள்ளார்கள். மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் டெல்லி சென்று ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசிடம் பேச முதல்வரிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல், நெல் உலர்த்தும் இயந்திரங்கள் எல்லா இடங்களிலும் கொண்டு வரப்படும். வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படமாட்டாது. வெளிமாநில நெல்லை கொண்டுவந்தால் லாரிகளை பறிமுதல் செய்ய மாநிலம் முழுவதும் செக்போஸ்ட்களில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.