மதுரை பெரிய ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்தியம் மற்றும் ரத்தினம் என்ற சகோதரர்கள். இவர்கள் இதே பகுதியில் வெண்டைக்காய், மல்லிகை உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளனர். ஆனால் அந்த வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் அதனை பறித்து விற்பனை செய்யாமல் செடியிலேயே விட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து வெண்டைக்காயை பயிரிட்ட நிலையில், ஒரு கிலோ வெண்டை 5 முதல் 10 ரூபாய் வரைக்கு மட்டுமே எடுத்து கொள்ளப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வெண்டைக்காய் விவசாயத்தால் பலன் இல்லை என கூறும் அவர்கள், தங்கள் தோட்டத்தில் விளைந்துள்ள வெண்டைக்காயை யார் வேண்டுமானாலும் இலவசமாக பறித்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
“வெண்டைக்காயை பறிக்க 100 ரூபாயை கூலியாக கொடுக்க வேண்டி நிலை உள்ளது. ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை” எனக்கூறும் அவர்கள், தங்கள் தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காயை பறித்து விவசாய வேலை பார்க்கும் பெண்களுக்கு இலவசமாக வழங்கினர். மேலும் நிறைய வெண்டைக்காய் இருப்பதால், இன்னும் யார் வேண்டுமானாலும் வெண்டைக்காயை இலவசமாக பறித்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
செலவு செய்து பயிரிட்டு விளைவித்த வெண்டைக்காயை கீழே கொட்டி வீணாக்க விரும்பாத அவர்கள், மக்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கத்தில் இதனை செய்வதாக தெரிவிக்கின்றனர். “விலை கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி; விலை கிடைக்காவிட்டால் மக்களுக்கு இலவசமாக கொடுத்து மகிழ்ச்சி அடைகிறோம்” என்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்தும் விலை சரிந்தும் காணப்படுகிறது. இதனால் இவர்களை போன்ற பல விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.