மேட்டூர் அணை இந்த ஆண்டு ஜூன் 12 திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியில் குறுவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு முப்போக சாகுபடி நடைபெற்ற நிலையிலும் அறுவடை நேரத்தில் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ள நிலையில், இந்த ஆண்டு கர்நாடகாவில் பருவ மழையும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து ஜூன் 12 மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறப்பதற்குள் வயல்வெளிகளை தயார் செய்யக்கூடிய பணியும் முற்பட்ட குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியில் 400 ஏக்கருக்கு தேவையான பாய் நாற்றங்கால் தயார் செய்யக்கூடிய பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுமார் மூன்று ஏக்கரில் இந்த கட்டமாக குருவை ரகமான ஆடுதுறை 36 ரக நெல் நாற்றங்கால் தயார் செய்யக்கூடிய பணி நடைபெற்று வருகிறது.
மேலும் தயார் செய்யப்பட்ட நாற்றங்கால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நடவு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அரசு விரைந்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் அனைவருக்கும் விதைநெல் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள்.
- ந.காதர் உசேன்