கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் கிராம்புக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் குமரி மாவட்ட கிராம்பு தோட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான மாறாமலை, கரும்பாறை, வேளிமலை, மகேந்திரகிரி பகுதிகளில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை காரணமாக, கிராம்பில் அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது. இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன். இதில், 1,000 மெட்ரிக் டன் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 750 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடியாகும் கிராம்பில், யூஜினால் அசிடேட் என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால், வாசனை எண்ணெய் அதிகம் கிடைக்கிறது. குமரி மாவட்ட கிராம்பு தரத்தில் முதலிடத்தில் உள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாறாமலை தோட்ட விவசாயிகள் சங்கம், கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத்தினரால் "கன்னியாகுமரி கிராம்பு"க்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
கிராம்புத் தோட்டங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் எனவும், உலகத்தரம் வாய்ந்த கிராம்பை அதிக அளவில் உற்பத்தி செய்ய தோட்டங்களில் விரிவாக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த கிராம்புகள் இறக்குமதிக்கு வரி விதிக்க வேண்டும் எனவும் கிராம்பு விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.