கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று விடியக்காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் காரீப் பருவத்தில் பயிர்க் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், சாகுபடி செய்த மணிலா மற்றும் கம்பு பயிர்களுக்கு 31.08.2021-க்குள் பயிர்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக விவசாயிகள் போதிய மழை இல்லாததால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வந்தனர்.
இதனிடையே இன்று அதிகாலையில் இருந்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலை 11 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ததால் பணிக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிறிது சிரமம் அடைந்து சென்றனர்.