6 ஆவது நாளாக தொடரும் NLC சுரங்கப்பணி.. உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக இன்று விசாரணை!

கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி இன்று நடந்து வருகிறது. விடிய விடிய 30க்கும் மேற்பட்ட கனரக வாகனம் மூலமாக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
NLC
NLC Twitter
Published on

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை அடுத்த மேல் வளையமாதேவி பகுதியில், என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்காக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட பகுதியில்  வாய்க்கால் வெட்டும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி புதிய பரவனாறு பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. இதில் 1.3 கிலோ மீட்டர் தூரம், 45 மீட்டர் அகலத்தில் விவசாயிகளில் நெற்பயிர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு வாய்க்கால் வெட்டப்பட்டது. இதையடுத்து “சுரங்கம் வெட்டும் பணி நடைபெறும் விவசாய நிலத்தை சார்ந்த நில உரிமையாளர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வேண்டும்” எனக்கூறி பல கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பலதரப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நெய்வேலி ஆர்ச்சி கேட் பகுதியில் நடைப்பெற்ற முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (30.7.2023) ஆறாவது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது.

NLC
என்.எல்.சி.-க்கு எதிராக பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது எப்படி?-பிரத்யேக தகவல்

இந்நிலையில், இதுதொடர்பாக  கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள வளையமாதேவி மேல்பாதி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “என்.எல்.சி. நிறுவனத்திற்காக 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளாக அந்த நிலத்தை பயன்படுத்தாமல், தற்போது நெல் பயிரிடப்பட்டுள்ள சமயத்தில் ஜூலை 26ஆம் தேதி கால்வாய் வெட்டுகின்றனர். பயிர் விளைந்து நிற்கும் நிலத்தில் புல்டோசர்களை வைத்து நாசப்படுத்தியுள்ளனர். என்னுடைய நிலம் உட்பட சுற்றியுள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாதிக்கப்படுகிறது. பாடுபட்டு மேற்கொள்ளப்பட்ட விவசாயத்தையும், எங்களது வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நிலத்தை சுவாதீனம் எடுக்கின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.

NLC Protest
NLC Protest Twitter

மேலும், “நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம், மறுவாழ்வு, செட்டில்மெண்ட் உரிமை சட்டத்தின் 101வது பிரிவு படி - குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தை 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தாவிட்டால், உரியவரிடம் அந்த நிலத்தை திருப்பி கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றுள்ளது. அதன் அடிப்படையில் எனது நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். நெல்லை அறுவடை செய்யும் வரை எனது நிலத்தில் என்.எல்.சி. நிர்வாகம் தலையிடக்கூடாது” என்று வழக்குபதிவு செய்துள்ளார்.

தற்போது இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதி, இன்று பிற்பகலில் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

High Court Hearing
High Court HearingTwitter

முன்னதாக நேற்று (30.7.2023) என்.எல்.சி நிர்வாகம் அளித்த விளக்கத்தில் கூறியதாவது, “பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் அனைத்தும் வற்றாத நீரினை பெறும். மேலும் தற்போதுள்ள 25,000 ஏக்கருக்கு அப்பால் புவனகிரி வரை பாசனத்திற்க்கு தண்ணீர் கிடைக்கும். அதுமட்டுமல்லாது நிரந்தர மாற்றுப்பாதை அமைக்காவிட்டால் மழை காலங்களில் குடியிருப்பு, நிலங்களில் கடும் வெள்ளம் ஏற்படலாம். அதோடுகூட நிலக்கரி சுரங்கம் 2 ல் கடுமையான வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தக்கூடும்.

மேலும் பரவனாறு நிரந்தர கால்வாய் அமைக்கும் பணியின் போது சிறிய அளவிலான பாசன நிலமே பாதிக்கப்பட்டது. கால்வாய் பணியில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கெனவே ஒப்படைக்கபட்டுவிட்டது. மேலும்  உரிய இழப்பீடு வழங்கி நிரந்தர மாற்றுப்பாதைக்கான நிலங்கள் ஏற்கனவே கையகபடுத்தப்பட்டன. இதோடுகூட நிரந்ததர மாற்றுப்பாதையில் ஏற்கனவே 10.5 கி.மீ.க்கு பணிகள் முடிக்கப்பட்டடுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com