நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புயலால் 14 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. 16 நிவாரண முகாம்களில் இதுவரை 474 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வேலூரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
கனமழை காரணமாக மேல் அரசம்பட்டு ஆறு, புலிமேடு காட்டாறு, அகரம் ஆறு, நாகநதி ஆறு உட்பட பாலாற்றின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 102 ஏரிகளில் 15 ஏரிகள் தற்போது நிரம்பியுள்ளன.
பள்ளிகொண்டா பெரிய ஏரிக்கு பேயாறிலிருந்து நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால் அந்த ஏரியைச் சுற்றியுள்ள மக்கள் தாமதிக்காமல் பாதுகாப்பாக அருகில் உள்ள பள்ளிக்கட்டிடத்துக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் , மாவட்டம் முழுவதும் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை 5.00 மணிக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 4.00 மணிவரை மூடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 12.00 மணிக்கு திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எதிர்பார்த்த அளவு காற்று இல்லாததால் கடையை திறக்க உத்தரவிட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில்,மிக கனமழை பெய்து வரும் சூழலில் கடை திறப்பது கடினமானகவுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்