கோவை மாவட்டம் சூலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள உர தயாரிப்பு மற்றும், மணல் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளால் அப்பகுதி நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட ராசிபாளையம், முத்துக்கவுண்டன் புதூர், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் முப்போகமும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இன்று ஆங்காங்கே உர தொழிற்சாலைகளும், மணல் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளும் காணப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் நிலத்திலேயே விடப்படுவதால் நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசடைந்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வாறு நிலத்தடி நீர் மாசானதால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் தென்னை மரங்கள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டு தேங்காய் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது அவினாசி நீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தனியார் தொழிற்சாலை நிர்வாகங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது சிலர் பதில் அளிக்க மறுத்து விட்டனர். சிலர் விதிமுறைக்கு உட்பட்டே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுவதாக தெரிவித்தனர்.