மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள், மத்திய அரசு அழைத்தால் பேசத் தயாராக உள்ளனர் என்றும், ஆனால் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறினார்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடைசியாக ஜனவரி 22 அன்று நடந்தது. அதன்பின்னர் குடியரசுத் தினத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பேச்சுவார்த்தை தடைபட்டது.
இந்த சூழலில் ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ், விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை வலியுறுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, பி.கே.யூ தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்த கருத்துகளின்படி “ வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள், மத்திய அரசு அழைத்தால் பேசத் தயாராக உள்ளனர். ஜனவரி 22 ஆம் தேதி முடிவடைந்த இடத்தில் இருந்து பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் வேண்டும் என்ற கோரிக்கைகள் மாறாமல் இருக்கும்” என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹரியானாவிலும் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த சூழலில் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது கவலையளிப்பதாக ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறினார்.