பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்தாதீர்கள் என வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் ரோஜா மற்றும் ஜெர்பரா மலர்களை பொதுமக்களுக்கு மலர் விவசாயிகள் வழங்கினர்.
இயற்கையாக செடிகளில் பூக்கும் ரோஜா, ஜெர்பரா ஆகிய மலர்களை பயன்படுத்துவதை தவிர்த்து விசேஷ காலங்கள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் மலர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இயற்கையாக மலர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டமும் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இதனை பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையிலும் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று ஓசூர் பேருந்து நிலையம் அருகே ஓசூர் பகுதிகளைச் சேர்ந்த மலர் விவசாயிகள், ஒரு லட்சம் ரோஜா மற்றும் ஜெர்பரா மலர்களை சாலையில் சென்ற பொது மக்களுக்க இலவசமாக வழங்கினர்.
அப்போது பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்தாதீர்கள். இதனால் மலர் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என அன்போடு அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலர் விவசாயிகள்... சீனாவில் இருந்து 98 சதவீதம் பிளாஸ்டிக் பூக்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பிளாஸ்டிக் மலர்கள் விற்பனையால் இந்தியாவில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மலர் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. எனவே இதனை தடுக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் பூக்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.