”அங்கை”.. இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் சிறு, குறு விவசாயிகள்; நீலகிரியில் ஓர் அசத்தலான முயற்சி!
நீலகிரி மாவட்டத்தில் அங்கை விவசாயம் எனப்படும் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு முதல் முயற்சியாக சிறுகுறு விவசாயிகளும் தோட்டக்கலை துறையினரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலைத்தோட்ட காய்கறிகள் பெரும்பாலும் இரசாயன உரத்தைப் பயன்படுத்தி விளைவிக்கப்படுவதால் மண் மலட்டுத்தன்மை அடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதை தடுக்க இயற்கை விவசாயத்தை நாடிமாவட்ட நிர்வாகமும் தோட்டக்கலை துறையினரும் இணைந்து விரிவாக்க சிறப்புத் திட்டத்தை கையில் எடுத்து உள்ளனர்.
முதல் கட்டமாக 4800 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. சில தனி நபர் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் நிலையில் கூட்டு முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் அதிக மகசூலை பெற முடியும் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவிக்கின்றனர்.