பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடு தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் நவம்பர் 15க்குள் பயிர்க்காப்பீட்டுக்கு பதிவு செய்யவேண்டும் என தமிழக அரசு அறிவித்திருப்பது சரியானதல்ல என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்திருக்கிறார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “குறுவை நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிகள், பருவமழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் காவிரி டெல்டா உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நடவுப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.
இதனால் நவம்பர் 15ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனைப் புரிந்துகொண்டு பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை இந்த மாத கடைசிவரை நீட்டிப்பதுடன், அதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவேண்டும். இதற்கு மாறாக, உடனடியாக பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளை தி.மு.க அரசு நிர்பந்திப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என தெரிவித்திருக்கிறார்.