கடலூர் மாவட்டத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப் பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவளூர், கட்சி பெருமாநத்தம் கிராம பகுதிகளில் 500 ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பில் இருந்த விவசாயிகள் மீண்டு வருவதற்குள், புதிய பிரச்னையாக காட்டுப் பன்றிகள் உருவெடுத்துள்ளன.
இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டுப் பன்றிகள் வேளாண் நிலங்களுக்குள் புகுந்து, பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், காட்டுப் பன்றிகளின் தொல்லையை போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.