மழையில் நெல்மூட்டைகள் நனைவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைவதால் விவசாயிகளின் கவலை தெரிவித்தனர். மேலும் அதற்கான முறையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்தது குறித்து வெளியான செய்திகளை கவனித்த உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்குத் தொடுத்து இதுகுறித்து விசாரித்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, காயவைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நெல்தான் மழையில் நனைந்ததாகவும், இது தொடர்பாக கூடுதல் விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்றும் கோரிக்கை வைத்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விவசாயிகளின் உழைப்பை வீணாக்கக்கூடாது என்று வலியுறுத்தியதோடு, மழையில் நெல்மூட்டைகள் நனைவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அடுத்த வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.