ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
Published on

உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டு ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம், விவசாய நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பரவி விவசாய நிலம் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புகிளார் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயிக்கு உக்கடை கமலாபுரம் கிராமத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்த விவசாய நிலத்திற்கு அடியில் 3 ஓஎன்ஜிசி குழாய்கள் செல்கின்றன. இந்த குழாய்கள் கோமாலபேட்டை பகுதியில் இருந்து நல்லூர் பகுதி வரை செல்கின்றன. இந்த நிலையில் இன்று காலை சுப்பிரமணி என்ற விவசாயிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்லக்கூடிய ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதியில் கச்சா எண்ணெய் முழுவதுமாக விளைநிலத்தில் பரவிவருகிறது.

இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் கச்சா எண்ணெய் கொப்பளித்து வரும் இடத்திற்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் அருகில் உள்ள அருள் ராஜா என்ற விவசாயியின் நிலத்திலும் கச்சா எண்ணெய் பரவி வருகிறது.

இதன் காரணமாக அடுத்த 5 வருடங்களுக்கு முழுவதுமாக விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் கச்சா எண்ணெய் பரவி வரும் விவசாய நிலத்திற்கு ஓஎன்ஜிசி அதிகாரிகள் தற்போது நேரடியாக வந்து ஆய்வு செய்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com