பாரத் பந்த்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான கடைகள் அடைப்பு!

பாரத் பந்த்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான கடைகள் அடைப்பு!
பாரத் பந்த்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான கடைகள் அடைப்பு!
Published on

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து 13 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 10.00 மணி வரையிலான தமிழகத்தின் நிலவரம்...

திருவாரூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் 2,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான விளக்குடி, முத்துப்பேட்டை, கட்டிமேடு, ஆலத்தம்பாடி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனால் திருவாரூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகம் விடுத்த அழைப்பின் பேரில் புதுக்கோட்டை உட்பட ஆலங்குடி கறம்பக்குடி, பொன்னமராவதி, விராலிமலை, அறந்தாங்கி உள்ளிட்ட பல பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர். பேருந்துகள், ஆட்டோக்கள் அனைத்தும் தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றது. திருமயம் தாலுகா பொன்னமராவதி பேரூராட்சி, அரிமளம் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனையகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர, பிற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் தாலுகாக்களில் 1000-க்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படாததால் கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது. அரசுப் பேருந்துகள் சொற்பமான பயணிகளுடன் இயங்குகின்றன.

நாகை: வேதாரண்யம் தாலுக்காவில் வர்த்தகர்கள் முழு அளவில் கடைகளை அடைத்திருந்தனர். தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு செய்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, 2000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்ததால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சீர்காழி: தரங்கம்பாடியில் பகுதிகளில் மருந்தகங்கள், பால் விற்பனையகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர, பிற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படாததால் கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது. அரசு பேருந்துகள் சொற்பமான பயணிகளுடன் இயங்குகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசுப் பேருந்துகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயங்கத் துவங்கியது.

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பகுதியில் மளிகை நகை, துணிக்கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் என 2000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. தினசரி காய்கறி சந்தையில் ஒரு சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையப் பகுதிகளில் அனைத்து வணிகக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் கடைவீதி, மைசூர் டிரங் ரோடு, ரங்கசமுத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதியில் வணிகக் கடைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக தேநீர் கடைகளும் அடைக்கப்பட்டன. தினசரி மார்க்கெட், உழவர் சந்தை செயல்படவில்லை. தமிழகம் - கர்நாடகம் இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒரிரு அரசு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பயணிகள் குறைந்தளவே இருந்தனர். எப்போதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்து செல்லும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்டது. பந்த் காரணமாக பாதுகாப்புப் பணிக்காக ஆயுதபடை போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் அனைத்துக் கடைகளும் திறந்து இயங்கிவருகின்றன. குறிப்பாக சின்ன காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிவரும் மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வணிகர் வீதி காந்தி சாலை ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து உள்ளன. ஜவுளி கடைகள் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேப்பர். டீ கடை, பூக்கடை, பழம், காய்கறிகள் மருந்தகம் தவிர, மற்ற அனைத்து கடைகளும் முழுவீச்சில் அடைக்கப்பட்டுள்ளன. நகை விற்பனையாளர் சங்கமும் இதில் கலந்துகொண்டதால் செங்கல்பட்டு ராஜாஜி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய பகுதிகளிலும் முழுவீச்சில் கடைகளை அடைத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறில் வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். ஒருசில பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. எதிர்க்கட்சியினர் சாலைமறியல் செய்யத் தயாராகி வருகிறார்கள்.

சிவகங்கை: சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையான்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். சிவகங்கை நேரு பஜார் பள்ளிவாசல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்: கரூர் நகரம் மற்றும் அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கடவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வழக்கம் போல வேலைக்கு சென்று வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com