கொடைக்கானல் ஏரியில் ஆகாயத்தாமரை அடர்ந்து படர்ந்து வருகிறது. ஏரி முழுவதும் ஆக்கிரமிக்கும் முன்னர் அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் கடந்த 80 நாட்களாக படகு சவாரி இல்லாமல் உள்ளது. படகு போக்குவரத்து இல்லாததால், ஏரிக்கரையோரங்களில் ஆகாயத் தாமரைகள் அடர்ந்து படர்ந்து அதிகமாக வளர்ந்து வருகின்றன. படகு போக்குவரத்து நடைபெறும் நாட்களில், படகு குழாம் பணியாளர்கள் மற்றும் நகராட்சியினர் இணைந்து, படரும் தாமரைகளை அவ்வப்பொழுது அகற்றி வந்ததாகவும், தற்பொழுது அப்பணிகள் நடைபெறவில்லை என ஏரிச்சாலை வணிகர் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
வேகமாக படரும் ஆகாயத் தாமரைகள் ஏரி முழுவதும் ஆக்கிரமிக்கும் முன்னர், நகராட்சி நிர்வாகத்தினர் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆகாயத்தாமரைகளை அகற்ற நகராட்சியினருடன் இணைந்து ஏரிச்சாலை வணிகர் கூட்டமைப்பினர் உதவ முன்வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் நாராயணனிடம் கேட்டதற்கு, ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.