மானிய உரங்கள் விற்பனையின்போது இதர விவசாய இடுபொருட்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தினால், உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு உழவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மானிய உரங்களை விற்பனை செய்யும் போது, விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக பல இடங்களில் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் கூடுதலாக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ள அரசு, இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் கூறியுள்ளனர்.
எனவே இதர விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உழவர் நலத்துறையால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது போன்று விதிமீறல்களில் ஈடுபடும் உர விற்பனையாளர்கள் குறித்து புகார் அளிக்க தனித்த தொலைபேசி எண்ணும் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதர உரங்களை வாங்கினால் மட்டுமே விவசாயத்துக்கு தேவையான அடிப்படை உரங்கள் விற்கப்படும் என பல இடங்களில் உர விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார் அளித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.