முல்லைப் பெரியாறு அணையின் முக்கியநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் ஒய்ந்ததால் அணையின் நீர்மட்டம் 129 அடியை நோக்கி தொடர்ந்து கீழிறங்கி வருகிறது.
கேரளாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியன தீவிரமாக பெய்ததால், தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நான்காவது முறையாக 142 அடியாக உயர்த்தது. இதற்கு முன் 2014, 2015, 2018ம் ஆண்டுகளில் அணை நீர்மட்டம் மூன்று முறை 142 அடியாக உயர்த்தது.
2021ம் ஆண்டு நான்காவது முறையாக அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்ட பின், அணையின் நீர்மட்டம் 141 மற்றும் 142 அடி க்கும் இடையில் கடந்த டிசம்பர் மாதம் வரை ஒரு மாதத்திற்கும் மேலாக நிலைநிறுத்தப்பட்டு அணையின் உறுதித் தன்மை நிரூபிக்கப்பட்டது. அணையின் பலம் மற்றும் உறுதித்தன்மை .குறித்த அறிக்கை உச்சநீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமுளி தேக்கடி வண்டிப் பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை .படிப்படியாக குறையத் துவங்கியது. இந்த பிப்ரவரி மாதம் மழை முற்றிலும் ஓய்ந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக தொடர்ந்து குறைந்து 129 அடியை நோக்கி கீழிறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் அணையின் நீர்மட்டம் 12 அடிக்கும் மேல் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 129.25 அடியாக உள்ளது, அணைக்கு நீர்வரத்து 110 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 4, 536 மில்லியன் கன அடியாக உள்ளது.
இனி, ஜூன் மாதம் துவங்குவதாக எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழை காலம் வரும் வரை, வருங்காலங்களில் கோடை மழையைத்தான் நம்ப வேண்டியுள்ளதாகவும், அவ்வப்போது கிடைக்கும் கோடை மழையால்தான் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அணையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.