|
உள்ளத்தில் ஒளி இருந்தால்...
யுவகிருஷ்ணா
‘இப்போ வாசி, பார்க்கலாம்’ தோளைத்தொட்டு முதல்வர் எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
மடமடவென்று மீண்டும் வாசிக்கத் தொடங்குகிறார் கொளஞ்சி. எம்.ஜி.ஆருக்கு சந்தேகம். ஒருவேளை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிக்கிறாரோ என்று. அதனால்தான் சில தாள்களை வேண்டுமென்றே திருப்பிவிட்டு மீண்டும் வாசிக்கச் சொன்னார். அதையும் முன்பைவிட வேகமாக கொளஞ்சி வாசித்ததுமே முதல்வருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தலையைத்தொட்டு ஆசீர்வதிக்கிறார். அந்த தொடுகை, இயேசுநாதரின் ஸ்பரிசம் போல எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது" என்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுபடுத்திக் கொண்டு இப்போதும் சிலிர்க்கிறார் கொளஞ்சி.
சம்பவம் நடந்த இடம், திருச்சி புத்தூர் பார்வையற்றோர் பள்ளி. பிரெயில் முறையில் அச்சிடப்பட்ட பாடத்தைதான் முதல்வருக்கு முன்பாக வாசித்துக் காட்டினார் கொளஞ்சி. மாற்றுத் திறனாளிகள் மீது மகத்தான அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர். அன்று முழுக்க அவர் அங்குதான் தன் நேரத்தைச் செலவிட்டார்.
அடுத்து, ஓட்டப்பந்தயம். வெல்பவர்களுக்கு எம்.ஜி.ஆர். கையால் பரிசு. மீண்டும் எம்.ஜி.ஆர். தன்னைத் தொடவேண்டும் என்பதற்காகவே, அதுவரை ஓடியே பழக்கமில்லாத கொளஞ்சியும் ஆர்வத்தோடு ஓடினார். வென்றார். ஆசைப்பட்டது மாதிரியே எம்.ஜி.ஆர். அவரது தலையை தடவிக்கொடுத்து பரிசளித்தார். ‘நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். மக்களுக்கெல்லாம் உதவணும்’ எம்.ஜி.ஆர். அன்று இவ்வாறு சொல்லி ஊக்கப்படுத்தியது கல்லில் உளியால் செதுக்கிய எழுத்துகளாய் கொளஞ்சியின் நெஞ்சில் பதிந்தது.
அப்போது பாரதியாரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு விமரிசையாகக் கொண்டாடியது. சென்னை ராஜாஜி ஹாலில் மாநிலம் தழுவிய பேச்சுப்போட்டி. எம்.ஜி.ஆர். பரிசளிப்பார் என்பதற்காகவே அந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பினேன். என்னவோ தெரியவில்லை, அப்போதிருந்த தலைமையாசிரியருக்கு என் மீது ஏதோ வருத்தம். ‘பள்ளி சார்பாக அனுப்ப முடியாது’ என்று மறுத்தார்.
தனிப்பட்ட முறையில் அப்பாவின் உதவியோடு சென்னைக்கு வந்தேன். பேசினேன். பரிசு பெற்றேன். இப்போதும் அதே தொடுகை. அதே வார்த்தை. ‘மக்களுக்கெல்லாம் உதவணும்’ எம்.ஜி.ஆர். சொன்ன அந்த மந்திரத்தைதான் இன்றும் பின்பற்றுகிறேன். அவர் கொடுத்த ஊக்கம்தான் என்னை வழிநடத்துகிறது" என்கிறார், நாற்பத்தி மூன்று வயதான கொளஞ்சிநாதன்.
கிளியூரின் கண்கள்
பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில் அமைந்திருக்கும் குக்கிராமம் கிளியூர். பெரம்பலூரிலிருந்து ஒரே ஒரு டவுன் பஸ் 1-பி மட்டும் அவ்வப்போது வந்து போகிறது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு சற்று முன்னதாக சின்னாறு என்றொரு ஊர். சர்க்கரை ஆலை ஒன்று இங்கே இருக்கிறது. வலப்பக்கமாகத் திரும்பி, குறுகிய சாலையில் போய்க்கொண்டே இருந்தோமானால் பெருமாத்தூர், எறையூர் என்று ஏராளமான சிற்றூர்கள். எறையூர் தாண்டி, வலப்பக்கமாக உள்ளே போனால் கிளியூர். மாவட்ட மேப்பில்கூட குறிப்பிட முடியாத அளவுக்கு சின்ன ஊர். கொளஞ்சி பிறந்தது இந்த ஊரில்தான். இன்னமும் அடிப்படை வசதிகள் பூர்த்தியடையாத வழக்கமான தமிழ்க் கிராமம்.
கல்லும் முள்ளுமாக இருக்கும் சாலையில் மூத்த மகன் ஜெகநாதனின் கைப்பிடித்து நடக்கிறார் கொளஞ்சி.
என்ன மாமா, நல்லாருக்கீங்களா?" எதிர்ப்படும் பெண் ஒருவர் நலம் விசாரிக்கிறார்.
நான் நல்லாருக்கேன். வீட்டுலே எல்லாரும் சவுக்கியம்தானா? கரெண்டு பில்லு கட்டினீங்களா இல்லையா.. தேதி ஆயிடுச்சே?"
எப்பவும் கரெண்டு கட்டாகித்தானே கெடக்குது. அதைப்போயி என்னாத்துக்கு கட்டுறது?"
கரெண்டு ரெகுலரா வருதோ, இல்லையோ கரெக்டா கட்டிடணும். பீஸ் புடுங்கிட்டான்னா, திரும்ப கனெக்ஷன் வாங்குறதுக்குள்ளே உசுரு போயிடும். அட்டையைக் கொண்டாந்து கொடு. வேப்பூர் பக்கமாதான் போறேன். கட்டிட்டு வந்துடறேன்"
ஏற்கெனவே கொளஞ்சியின் கையில் பத்துக்கும் மேற்பட்ட மின்கட்டண அட்டைகள்.
மின்கட்டணம் கட்டுவது மட்டுமல்ல... பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, இயற்கை மரண நிதியுதவி, முதியோர் பென்ஷன், திருமண உதவி, பிரசவ உதவி என்று அரசு தொடர்பான அனைத்து உதவிகளையும் கிளியூர் மக்களுக்கு செய்து தருவது கொளஞ்சி. பெரும்பாலானவர்கள் பாமரர்கள் என்பதால் மனு எழுதுவது, அதை சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு சமர்ப்பித்து, வேலை முடித்துக் கொடுப்பது வரை எல்லாவற்றுக்குமே கொளஞ்சிதான். மொத்தத்தில் அரசுக்கும், கிளியூர் மக்களுக்கும் இடையே இன்று இவர்தான் பாலம்.
பார்வை எதுக்கு... பாசம் இருக்கு!
பிறவியிலேயே இக்குறைபாடு இல்லை. பிறக்கும்போது கொளஞ்சிக்குப் பார்வை இருந்தது. மூன்று வயதாக இருக்கும்போது மஞ்சள் காமாலை. படிக்காத பெற்றோருக்கு முறையாக மருத்துவம் செய்யத் தெரியவில்லை. அதற்கான வசதிகளும் அவர்களுக்கு இல்லை. பக்கத்து கிராமம் ஒன்றில் நாட்டு மருத்துவரை அணுகியிருக்கிறார்கள். அவர், கொளஞ்சியின் கண்ணில் ஏதோ சொட்டுமருந்து மாதிரிவிட, அதன் பக்கவிளைவால் கொஞ்சம் கொஞ்சமாக பார்வை மங்க ஆரம்பித்தது. ஊர் ஊராக ஏதேதோ வைத்தியர்களை நாடினார்கள். முன்னேற்றம் ஏதுமில்லை. கடைசியாக கொளஞ்சிக்கு ஏழு வயதாக இருந்தபோது ஒரு நாட்டு வைத்தியரிடம் சிகிச்சைக்காகப் போனார்கள். அவரும் தன் பங்குக்கு ஏதோ ஒரு மருந்தை கண்ணில்விட... அன்றுதான் மொத்தமாகப் பார்வை பறிபோனது.
கடைசியாக அந்த மருந்து, என் கண்ணில் விழும்போது ஒருமாதிரி வெளிச்சம் தெரிந்தது. அதே வெளிச்சம்தான் இப்போ வரைக்கும் எனக்கு இருக்கு. இருட்டிலும் கூட என் கண்களுக்கு மட்டும் அந்த வெளிச்சம் நிரந்தரமா இருந்துக்கிட்டே இருக்கும். எதிரிலே யாராவது வந்தா லேசா நிழலாடறமாதிரி தெரியும்."
பார்வையில்லாதவர் என்பதால், இவரைப் பரிதாபமாக ஊர் நடத்தவில்லை. மற்ற பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்வார்களோ, அதேமாதிரிதான் இவரிடமும் நடந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணு தெரியாதுங்கிறதாலே, ‘கடை கண்ணிக்கு அனுப்ப மாட்டோம்னெல்லாம் இல்லை டேய் தம்பி! ஓடிப்போய் தெருமுனை கடைக்குப் போயி வெத்தலை பாக்கு வாங்கியாடா’ன்னு அனுப்புவோம். ஓடுவான். இந்த மாதிரி இயல்பா நடத்துனதாலே, தனக்கு குறை இருக்கிற மாதிரியே கொளஞ்சி உணர்ந்ததில்லை" என்கிறார், அவருடைய சித்தப்பா ரங்கசாமி.
எங்க ஜனங்களுக்கு படிப்பு இல்லாம இருக்கலாம். ஆனா இவங்களுக்கு இருக்கிற பண்பு, உலகத்துலே வேற யாருக்கும் இருக்காது" என்று தன் ஊர்க்காரர்களை பெருமிதமாக அறிமுகப்படுத்துகிறார் கொளஞ்சி. பார்வை இல்லை என்பதைப் பற்றி இவருக்கு கவலை எதுவுமில்லை. ஊர்க்காரர்கள் இவர் மீது காட்டும் பாசத்தை எப்படி திருப்பிச் செலுத்துவது என்றே தெரியவில்லை என்கிறார்.
படிப்பு மீது ஆர்வம்
திருச்சி புத்தூர் பார்வையற்றோர் பள்ளியில்தான் ஆரம்பப்பாடங்களைப் படித்தார். பிரெய்லி முறையில் வாசிக்க கற்றுக்கொண்டார். அங்குதான் முதன்முறையாக எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘நல்லா படிக்கணும்’ என்கிற எம்.ஜி.ஆரின் கட்டளையை நிறைவேற்ற கடுமையாகப் படிக்க ஆரம்பித்தார். மேல்நிலைக் கல்விக்காக பூந்தமல்லியில் இருந்த அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு வந்தார்.
வெற்றிகரமாக +2 முடித்தபின் லயோலா கல்லூரியில் பி.ஏ. (தமிழ்) சேர்ந்தார். இலக்கியம் மீது ஆர்வம் கூடியது. சொந்தமாக கவிதை எழுதி, மெட்டமைத்துப் பாடும் திறன் பெற்றார். இங்கிருந்த பார்வையற்றோர் சங்கங்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார். உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களில் கொளஞ்சியின் கோஷம் தனித்துக் கேட்கும்.
இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் ஊரில் இருந்து இடியாக இறங்கியது அச்செய்தி. அப்பாவின் திடீர் மரணம். தரை நழுவி பிடிமானமே இல்லாததைப் போல உணர்ந்தார் கொளஞ்சி.
வாழ்வா, சாவா பட்டிமன்றம்
குடும்பப் பாரத்தை தோள் மீது சுமக்க, பெரும் மனச்சுமையோடு கல்வியைக் கைவிட்டார். அப்போதெல்லாம் பார்வையற்றவர்கள் வழக்கமாகப் பார்க்கும் வேலைதான் சென்னையிலேயே லாட்டரி டிக்கெட் விற்பனை. கொளஞ்சிக்கு இதில் விருப்பமில்லை. ஒருமாதிரியாக அவருக்கு மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட இத்தொழில் ஒரு சூதாட்டம். பல குடும்பங்களின் நிம்மதியைக் கெடுக்கிறது. விரைவில் இதில் இருந்து வெளிப்பட வேண்டும். ஒருநாள் மன உளைச்சல் அதிகமாக, தொழிலை விட்டு விட்டார். வறுமை கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியது. தன்னுடைய வயிற்றுப் பசிக்கே வழியில்லாத நிலையில், குடும்பத்தை எப்படிக் காப்பாற்ற முடியும்?
அப்போது சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் டெலிபோன் பூத் நடத்திக் கொண்டிருந்த பார்வையற்றவர் ஒருவர், திடீர் மரணம் அடைந்தார். அந்த பூத்தைக் கேட்டு நிறைய பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் கொளஞ்சியும் ஒருவர். தினம் தினம் டெலிபோன் அலுவலகத்துக்கு நடையாக நடந்தார். ஒருகட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் பலரும் ஆர்வம் இழந்துவிட, கொளஞ்சியின் விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி. உன்னுடைய தொடர்ச்சியான முயற்சிக்குதான் இந்த டெலிபோன் பூத்தை உன்னிடம் கொடுக்கிறேன்" என்றார், அங்கிருந்த தொலைபேசித்துறை பொதுமேலாளர்.
சார்! சாவா, வாழ்வான்னு என் வாழ்க்கையில் பட்டிமன்றம் நடந்துக்கிட்டிருந்தது. நீங்க வாழச் சொல்லி தீர்ப்பு கொடுத்திருக்கீங்க" என்று அவருக்கு நன்றி சொன்னார்.
திடீர் கல்யாணம்
மாமா, எனக்கு வீட்டுலே கல்யாணம் பேசுறாங்க. ஏதாவது செய்யுங்க" திடீரென்று தாய்மாமன் மகள் உமா போனில் சொன்னபோது, கொளஞ்சிக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் என்னம்மா செய்யுறது... கல்யாணம் நல்ல விஷயம்தானே?"
அய்யோ மாமா! உனக்குப் புரியலை. உன்னோட டெலிபோன் பூத்தை நேர்லே பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு நான் மெட்ராசுக்கு வர்றேன்."
சொன்னமாதிரியே வந்தார் உமா. வழக்கமாக கண்ணுக்கு முன்னால் யாராவது வந்தால், கொளஞ்சிக்கு நிழலாடும். அன்று மட்டும் பிரகாசத்தை உணர்ந்தார். அங்கிருந்து தன் வீட்டுக்கு போன் செய்தார் உமா.
எனக்கும் மாமாவுக்கும் மெட்ராசுலே கல்யாணம் ஆயிடுச்சு."
உமாவின் பெற்றோருக்கு அதிர்ச்சியோ, இல்லையோ, கொளஞ்சிக்குப் பயங்கர அதிர்ச்சி. இருவரும் அதற்கு முன்பாக திருமணம் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டது கூட இல்லை. உமா தன்னைக் காதலிக்கிறார் என்பதைக்கூட கொளஞ்சி அறிந்திருக்கவில்லை. மாமாவைத்தான் கட்டவேண்டும் என்று சிறுவயதில் இருந்தே உமாவுக்கு எண்ணம் இருந்திருக்கிறது. அவரது பெற்றோருக்குதான் இவருக்கு பெண் கொடுக்கத் தயக்கம். எனவேதான் திருமணம் ஆகிவிட்டதாக பொய் சொன்னார். வேறு வழியின்றி பெரியவர்கள் கூடிப்பேசி, பின்னர் திருமணம் நடத்தினார்கள்.
எங்களோட மேரேஜ், லவ் மேரேஜெல்லாம் கிடையாதுங்க. என்னோடவே காலம் முழுக்க இருக்கணும்னு அவங்க ஆசைப்பட்டிருக்காங்க. அவ்ளோதான்" சொல்லும்போது, கொளஞ்சியின் குரலில் லேசான வெட்கம்.
நல்லறமான இல்லறத்துக்கு சாட்சியாக இப்போது ஜெகநாதன், வெற்றிக்கொடி, முல்லைநாதன் என்று மூன்று மழலைச் செல்வங்கள்.
ஊருக்குத் திரும்பினார்
பூந்தமல்லிக்குப் படிக்க வந்ததிலிருந்து சென்னையை சுற்றிதான் கொளஞ்சியின் வாசம். சொந்தமாக டெலிபோன் பூத், கல்யாணம், குழந்தை என்று வாழ்க்கை களைகட்டத் தொடங்கியது. செல்போன் பெருகிவந்த காலம் என்பதால், டெலிபோன் பூத்துகளுக்கு மவுசு குறைய, மீண்டும் வாழ்வியல் நெருக்கடி. திரும்பவும் தொழிலை மாற்றவேண்டும்.
இம்முறை ஆவடி ரயில்வே கேட்டுக்கு அருகில் ஒரு கடை பிடித்து ஃபேன்சி பொருட்கள் விற்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நல்ல வருமானம். ஆனால், கடைக்கு அங்கீகாரம் இல்லை. உள்ளூர் போலீஸார் தொல்லை. தினம் தினம் மாமூலாகக் கிடைத்த லாபத்தை கட்டி அழவேண்டியிருந்தது. பார்வையற்றவர் என்பதால், சில லோக்கல் ரவுடிகளும் தங்களை போலீஸ் என்று சொல்லிக்கொண்டு மாமூல் வாங்க ஆரம்பித்தார்கள். வாழ்க்கையின் எல்லைக்கே துரத்திக் கொண்டிருந்தது விதி. பட்டணம் வந்து கெட்டது போதும். ஊருக்குப் போய் பிழைப்பைப் பார்ப்போம் என்று குடும்பத்தோடு ஊர் திரும்பினார் கொளஞ்சி.
நீ என்ன ஏஜெண்டா?
பெரம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு ‘பங்க்’ கடை போட்டார். தினமும் பெரம்பலூர் வரை போய் வருவதால், கிளியூர்க்காரர்கள் தாலுகா அலுவலகத்துக்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் கொடுக்க வேண்டிய மனுக்களை இவரிடம் கொடுக்க ஆரம்பித்தார்கள். மனு கொடுப்பதோடு நின்றுவிடாமல், அதன் மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றும் இவரே தன்னார்வத்தோடு பின்தொடர ஆரம்பித்தார். இவ்வகையில் சிலருக்கு கொளஞ்சியால் ‘முதியோர் பென்ஷன்’ கிடைக்க, ஊரில் கொளஞ்சியின் புகழ் பரவியது. எல்லாவற்றுக்குமே கொளஞ்சியிடம் வர ஆரம்பித்தார்கள். ‘மக்களுக்கெல்லாம் உதவணும்’ என்கிற எம்.ஜி.ஆரின் மந்திரச் சொற்கள் அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்குவர, முகம் சுளிக்காமல் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யத் தொடங்கினார்.
அந்த மாதிரி ஒருமுறை ஏதோ வேலைக்காக தாலுகா அலுவலகத்துக்குச் செல்கிறார்.
போனவாரம் ஒரு மனு கொடுத்திருந்தோம். அதோட நிலைமை என்னங்க?"
அங்கிருந்த அலுவலர் அன்று என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியவில்லை. நீதான் உங்க ஊருக்கு ஏஜெண்டா..? எல்லாத்துக்கும் நீயே வந்து அதிகாரம் பண்ணுறே..?" என்று எகிற ஆரம்பித்துவிட்டார்.
மன வருத்தம் அடைந்த கொளஞ்சி ஊர் திரும்பினார். நடந்ததைச் சொல்ல... ஊர் மக்களுக்குக் கோபம். உன்னை ஊருக்கு ஏஜெண்டான்னு கேட்டாங்க இல்லே. ஏஜெண்ட் ஆக்கிக் காட்டுறோம். அடுத்த எலெக்ஷன்ல நம்ம வார்டுலே நீ நில்லுப்பா" என்றார்கள்.
தேர்தலில் வென்றார்
2011 உள்ளாட்சித் தேர்தல் நேரம் அது. கொளஞ்சிதான் தங்கள் வார்டு வேட்பாளர் என்று கிளியூர்க்காரர்கள் உறுதியாக இருந்தார்கள். நன்னை ஊராட்சியில் கிளியூருக்கு இரண்டு வார்டுகள். முதல் வார்டில்தான் கொளஞ்சி வசிக்கிறார். துரதிர்ஷ்டவசமாக வார்டுகள் இரண்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட... என்ன செய்வதென்று யோசித்தார் கொளஞ்சி.
நீ நிக்கமுடியலைன்னா என்ன... உன் பொண்டாட்டியை நிறுத்துப்பா. எல்லா ஊர்லேயும் மகளிருக்கு ஒதுக்கப்படற இடங்களில் இப்படித்தான் நிறுத்துறாங்க" - ஊர் இவரை விடவில்லை.
உமா கொளஞ்சிநாதன் பெயரில் மனு போட்டு முடித்தவுடன்தான் தெரிந்தது, எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யாரென்று. செல்வாக்கானவர். கூடவே, அவர் கொளஞ்சிக்கு சகோதரிமுறையானவரும் கூட. நேராக அவரிடம் சென்றார் கொளஞ்சி.
அக்கா! தேர்தல் வேற. நம்ம சொந்தம் வேற. ஜனங்களுக்கு நான் நல்லது பண்ணணுங்கிறதுக்காக தேர்தலில் நிக்க வெக்கிறாங்க. வெற்றி, தோல்வி ஒரு புறம் இருக்கட்டும். நம்ம சொந்தத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லே..." என்று ஆரம்பத்திலேயே தெளிவாகப் பேசிவிட்டார்.
மொத்தம் 201 வாக்குகள் ஒன்றாவது வார்டில் பதிவாகியது. உமாவுக்கு 125 வாக்குகள். அமோக வெற்றி. இப்போது அரசு அலுவலகங்களுக்கு ஊரின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டாகவே கொளஞ்சி தன்னுடைய மனைவியோடு கம்பீரமாகப் போகிறார். உரிமைகளை தட்டிக்கேட்டு வாங்குகிறார். அரசின் திட்டங்கள் அத்தனையையும் ஆர்வத்தோடு அறிந்து வைத்துக் கொள்கிறார். அதில் எவை எவற்றை தன்னுடைய ஊருக்கும் மக்களுக்கும் பெற்றுத்தர முடியுமோ, அத்தனையையும் முயற்சிக்கிறார். யாரையும் சேராத தனிநபர் என்பதால், கட்சிப்பாகுபாடு சுத்தமாக இல்லை. அம்மாவின் தாயுள்ளம், கலைஞரின் தமிழ், கேப்டனின் தைரியம் என்று தலைவர்கள் அனைவருக்குமே ரசிகர் இவர்.
மனுஷங்கள்லே நல்ல மனுஷன், கெட்ட மனுஷன்னு பாகுபாடே கிடையாதுங்க. மனுஷன்னாலே நல்லவன்தான். சூழ்நிலைதான் இப்படியெல்லாம் பிரிச்சுப் பார்க்கவும், பேசவும் வைக்குது" என்று டக்கென்று தத்துவம் சொல்கிறார்.
கூலிவேலைக்குப் போகிறார் மக்கள் பிரதிநிதி
உமா கொளஞ்சிநாதன் தேர்தலில் வென்று இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறது. இடையில் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கொளஞ்சியின் பெட்டிக்கடைக்கு பிரச்சினை. நகராட்சி கமிஷனரே அனுமதி கொடுத்தும்கூட அலுவலர்களால் தொல்லை. வளர்ச்சித்திட்டம் என்றுகூறி இப்போது கடையையே திறக்க முடியாதபடி, எதிரே பள்ளம் தோண்டி வைத்திருக்கிறார்கள். மாற்று இடமும் இன்னும் வழங்கப்படவில்லை.
வருமானம் இல்லையென்பதால், உமா கூலிவேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். கட்டிட வேலை, ஆண்டுக்கு நூறுநாள் வேலைத் திட்டம் என்று சொற்பமான வருமானம். கணவன், மனைவி, மூன்று குழந்தைகள் என்று வாய்க்கும், வயிற்றுக்குமே பற்றாக்குறைதான். வசிக்கும் வீடும் பரம்பரையான மிகப் பழைமையான ஓட்டு வீடு. இடிந்து விழும் நிலையில், பாழடைந்து கிடக்கிறது. ஆனாலும் உமாவுக்கோ, கொளஞ்சிக்கோ கொஞ்சமும் சலிப்பில்லை.
மாமா எதைச் செய்தாலும் நாலுக்கு பேரு நல்லதாதான் செய்வாரு. அதாலே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கிறோம்" என்கிறார் உமா.
வீடு இவ்வளவு மோசமா இருக்கே... தொகுப்பு வீடு, பசுமை வீடுன்னு அரசிடம் எவ்வளவோ திட்டங்கள் இருக்கு. நீங்க விண்ணப்பிக்கலாமே சார்?"
ஊருக்குன்னுதான் இதுவரைக்கும் கேட்டுப்போய் நின்னிருக்கேன். அதனாலேதான் எங்க மாவட்ட கவுன்சிலர் கூட, ‘இவரை மாதிரி மத்தவங்களும் செயல்படுங்க’ன்னு என்னை எல்லாத்துக்கும் உதாரணம் காட்டுறாங்க. எனக்குன்னு போயி கேட்டா, அது நல்லாயிருக்காதுங்க. நான் வசிக்கிற கிழக்குத் தெருவில் தண்ணி எப்பவுமே பிரச்சினைதான். மழைக்காலம் வந்தா வெள்ளம். வெயில் காலத்திலே குடிநீர்ப் பஞ்சம். அப்புறம் ஊருக்கு கூடுதலா பஸ் வரவைக்க முயற்சிக்கணும். ரோடெல்லாம் எவ்வளவு மோசமா இருக்கு பாருங்க. இன்னும் ஊருக்குப் பார்க்க வேண்டிய வேலையே நிறைய பாக்கியிருக்கு" என்கிறார் கொளஞ்சி.
அவருக்காகக் கேட்க, கொளஞ்சிக்குத் தயக்கமிருக்கலாம். ஆனால், நாம் உரிமையோடு கேட்கலாம். ஊருக்காக உண்மையாக உழைக்கும் ஒரு மக்கள் சேவகர் கவுரவமான வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டுமோ, அதை அரசு செய்து தர வேண்டும். கருணையுள்ளம் கொண்டவர் நம் தமிழக முதல்வர். செய்து தருவார் என்று நம்பலாம். தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளால், மக்கள் நலத்துக்காகப் பணியாற்றும் ஒருவர் சலிப்படைந்துவிட்டால் இழப்பு அவருக்கல்ல, சமூகத்துக்குதான்!
எம்.எல்.ஏ.வின் பாராட்டு
குன்னம் தொகுதிக்கு உட்பட்டதுதான் கிளியூர். இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ்.சிவசங்கர்தான் தன் தொகுதிவாசியான கொளஞ்சியைப் பற்றி, ‘புதிய தலைமுறை’யிடம் சொல்லியிருந்தார்.
சார், கிளியூர்லேருந்து கொளஞ்சி பேசறேன்னு அடிக்கடி கணீர்னு போனில் குரல் கேட்கும். பொதுப்பிரச்சினைகளுக்கு மட்டும்தான் பேசுவார். ‘உங்களுக்கு நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க சார்’னு கேட்பேன். ‘எனக்கெதுவும் வேணாம், எங்க ஊர்ப் பிரச்சினைகளை மட்டும் சரிசெஞ்சு கொடுங்க’ன்னு சொல்லுவாரு. அப்பப்போ குறிப்பா சில பிரச்சினைகளை என் பார்வைக்குக் கொண்டு வருவாரு. பார்வையில்லாத நிலையில், பொதுப்பணிக்கு இவர் வந்தது பாராட்டுக்குரிய செயல். கிளியூருக்கு இவர்தான் ஒளி வீசும் கண்கள்" என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் எம்.எல்.ஏ.
கொளஞ்சியைப் பற்றி கிளியூர்க்காரர்கள்...
பெரியசாமி
ஊர்க்காரர்
கொளஞ்சிக்கு சின்ன வயசுலே இருந்தே ஊர்ப்பாசம் அதிகம். ஜனங்க அவரை நல்லபடியா நடத்துனாங்க. அதுக்கு நன்றிக்கடனா ஊருக்கு ஏதாவது செய்யணுமேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. அதுக்கு வாய்ப்புக் கொடுக்கிற மாதிரிதான் அவரோட மனைவியை எங்க பிரதிநிதியா தேர்ந்தெடுத்தோம்."
கருப்பப்பிள்ளை
ஊர்ப்பெரியவர்
தேர்தலுங்கிறது சம்பாதிக்கிறதுக்கான வழி கிடையாது. ஊருக்கு உழைக்கக் கிடைச்ச வாய்ப்பு. தேர்தல்லே ஜெயிச்சப்புறம் கொளஞ்சிநாதன் நல்லா வேலை பார்க்கிறாரு. அடுத்த தேர்தலில் அவரை ஊராட்சித் தலைவரா ஆக்குவோம்."
அருணாசலம்
அதிமுக கிளைச்செயலாளர்
கட்சிப்பாகுபாடு இவருகிட்டே சுத்தமா கிடையாதுங்க. அதிமுக, திமுகன்னுலாம் பார்க்க மாட்டாரு. நியாயமான கோரிக்கையா இருந்தா, அதை நிறைவேத்துறதுக்காக சிரமம் பார்க்காம உழைப்பாரு. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்து, இந்தியா ஆதரிக்கணும்னு பிரச்சினையைப் பத்தி ஊர்லே பிரச்சாரம் பண்ணினாரு. எல்லாருகிட்டேயும் கையெழுத்து வாங்கி கவர்னர், பிரதமர், குடியரசுத் தலைவருக்கு மனுவும் அனுப்பினாரு."
‘புதிய தலைமுறை’ வாசகர்
கொளஞ்சி, ‘புதிய தலைமுறை’ இதழை வழக்கமாக வாசிக்கும் வாசகர். தமிழில் முதன்முறையாக பிரெயில் வடிவில் வெளியிடப்படும் (இதுகுறித்த அறிவிப்பை 15 டிசம்பர் 2011 தேதியிட்ட இதழில் காண்க) ‘புதிய தலைமுறை’ இதழ் தொகுப்பை தொடர்ச்சியாக வாசிக்கிறார். நம்மிடம் சில கட்டுரைகளை நினைவுபடுத்தியும் பேசினார்.
தங்களோட பத்திரிகையிலே வர்ற நல்ல கருத்துகளையும், கட்டுரைகளையும் பார்வையற்றோரும் வாசிக்கணும்னு வேற யாருமே நினைக்கலை. அந்தப் பெருந்தன்மை, ‘புதிய தலைமுறை’க்கு மட்டும்தான் இருக்கு. இதுக்காக உங்க ஆசிரியருக்கும், நிர்வாகத்துக்கும் பார்வையற்றோர் சார்பில் என்னோட நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவிச்சிடுங்க சார்!" என்றார்.
வாசகர்களோடு அவரது வாழ்த்தை, ‘புதிய தலைமுறை’ பகிர்ந்து கொள்கிறது. நம் இருப்புக்கு என்றுமே அர்த்தமுண்டு!
|