'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி?' - புதிய தகவலால் சலசலப்பு

'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி?' - புதிய தகவலால் சலசலப்பு
'டிச.3-ல் சசிகலா விடுதலை; டிச.5-ல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி?' - புதிய தகவலால் சலசலப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, வரும் டிசம்பர் 3 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாகவும், டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா நினைவுதினத்தில் அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தகவலால் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள் வரவிருக்கிறது, இதனால் வரும் டிசம்பர் 3 ஆம் தேதியே சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் இவர் டிசம்பர் 5இல் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

முன்னதாக சசிகலா எப்போது விடுதலையாவார் என்று தகவல் அறியும் உரிமை மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம், அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் விடுதலையாவார் என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 10.10 கோடி அபதாரத்தொகையும் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், அவர் விரையில் விடுதலையாகலாம் என்ற தகவல்கள் உலவி வந்தன. தற்போது அவர் தற்போது டிசம்பர் 3 இல் விடுதலையாகலாம் என்ற தகவலை சசிகலாவுக்கு நெருக்கமான நபர்கள் தெரிவித்துள்ளனர். அவர் டிசம்பர் 3இல் விடுதலை செய்யப்படுவார் என்று வாய்மொழியாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும், வரும் திங்கள்கிழமை அதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவு கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அபதாரத் தொகையை கட்டியவுடனே சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் ஏதேனும் முக்கியமான தினத்தில்தான் வெளியில் வரவேண்டும் என காத்திருந்து ஜெயலலிதாவின் நினைவுநாளின்போது இவர் விடுதலையாக முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் சிறையிலிருந்து வந்தவுடன் தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்குவார் என்று கூறுகின்றனர்.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் சசிகலாவின் வருகையால் அதிமுக, அமமுகவில் ஏதேனும் தாக்கங்களை உருவாக்குமா என்பதே தற்போது அரசியல்களத்தில் பரபரப்பான செய்தியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com